இந்தியாவை வென்றது இலங்கை

சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் அணிகளின் தலைவர்களான மஹமதுல்லா, டினேஷ் சந்திமால், ரோஹித் ஷர்மா ஆகியோர் கிண்ணத்துடன் காணப்படுகிறார்கள்.

நிதகாஸ் கிண்ணம் என அழைக்கப்படும் சுதந்திரக் கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் முதற் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா அணியை 05 விக்கெட்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றது. குசல் பெரேராவின் அதிரடியான துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தது. இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை அணி இந்தியா அணியினை வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு வருடங்களில் 6 தோல்விகளை இலங்கை அணி இந்தியா அணியிடம் சந்தித்துள்ளது. 13 வது ஓவர் வரை இலங்கை அணிக்கு இலகுவான சாதகமான நிலை காணப்பட்ட போதும், குசல் பெரேரா ஆட்டமிழந்ததை தொடர்நது இந்தியா அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணி அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்தார்கள். இதனையடுத்து போட்டி விறு விறுப்பான கட்டத்துக்கு நகர்ந்தது. தஸூன் சாணக்க, திசர பெரேரா ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தது. இந்தியா அணிக்கெதிராக துரதியடித்து பெற்ற சிறந்த வெற்றியாக இந்த வெற்றி இலங்கை அணிக்கு அமைந்தது. போட்டியின் நாயகனாக குசல் பெரேரா தெரிவானார்.

175 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது. அதிரடியாக அடித்தாடிய குசல் பெரேரா 22 பந்துகளில் அரைச்சதமடித்தார். அவர் 37 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 22(10) ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக 19(12) ஓட்டங்களையும், உப்புல் தரங்க 17 (18)ஓட்டங்களையும், தஸூன் சாணக்க ஆட்டமிழக்காமல் 15(18) ஓட்டங்களையும் டினேஷ் சந்திமால் 14(11) ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 11(06) ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தியா அணியின் பந்துவீச்சில் வோஷிங்டன் சுந்தர் நான்கு ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார். குசல் பெரேராவின் விக்கெட்டினை இவரே கைப்பற்றினார். யுஸ்வேந்த்ரா ஷஹால் நான்கு ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார். ஜெயதேவ் உனட்கட் 3 ஓவர்கள் பந்து வீசி 35 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டினை கைப்பற்றிய அதேவேளை, ஷர்டுல் தாகூர் 3.3 ஓவர்களில் 42 ஓட்டங்களை வழங்கினார். விஜய் ஷங்கர் 2 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 2 ஓவர்கள் பந்துவீசி 14 ஓட்டங்களையும் வழங்கினார்கள்.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இலங்கை அணியின் ஆரம்ப பந்துவீச்சு சிறப்பாக அமைய இந்தியா அணியின் ஆரம்ப 2 விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்டன. இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷிகார் தவான், மானிஷ் பாண்டி ஆகியோர் 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இந்தியா அணியினை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். அதிரடியாக துடுப்பாடிய ஷிகார் தவான் தனது கூடுதலான 20-20 ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டார். அவர் 82 ஓட்டங்களை பெற்ற வேளையில் விக்கெட் காப்பாளர் டினேஷ் சந்திமால் அவரின் பிடியினை நழுவ விட்டார். ஆரம்பத்தில் வழங்கிய அழுத்தத்தை இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்நது வழங்க முடியவில்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர்.
இந்தியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் ஷிகார் தவான் 4 ஆறு ஓட்டங்கள், 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 90 (49)ஓட்டங்களையும், மானிஷ் பாண்டி 37(35) ஓட்டங்களையும், ரிஷாப் பான்ட் 23 (23)ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 13 (06)ஓட்டங்களையும் பெற்றனர். ரோஹித் ஷர்மா ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்த அதேவேளை சுரேஷ் ரெய்னா 01 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் டுஸ்மாந்த சமீர முதலிரு ஓவர்களில் 3 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டினை கைப்பற்றினார். அவர் தன்னுடைய நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார். தனுஷ்க குணதிலக 3 ஓவர்களில் 19 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டினை கைப்பற்றினார். நுவான் பிரதீப் 3 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினையும், ஜீவன் மென்டிஸ் 3 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். திசர பெரேரா 3 ஓவர்களில் 25 ஓட்டங்களை வழங்கிய அதேவேளை அகில தனஞ்செய 4 ஓவர்களில் 37 ஓட்டங்களை வழங்கினார்.

சுதந்திர கிண்ண தொடரின் அடுத்த போட்டி நாளை மறுதினம்(08.03.2018) பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

-விமல்-
ஆர்.பிரேமதாச மைதானத்திலிருந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*