இலங்கைக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

நிதகாஸ் கிண்ணம் என அழைக்கப்படும் சுதந்திரக் கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் முதற் போட்டி இன்று (06/03/2018) இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இலங்கை அணியின் ஆரம்ப பந்துவீச்சு சிறப்பாக அமைய இந்தியா அணியின் ஆரம்ப 2 விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்டன. இருப்பினும்  மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷிகார் தவான், மானிஷ் பாண்டி ஆகியோர் 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக  பெற்று இந்தியா அணியினை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். அதிரடியாக துடுப்பாடிய ஷிகார் தவான் தனது கூடுதலான 20-20 ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டார். அவர் 82 ஓட்டங்களை பெற்ற வேளையில் விக்கெட் காப்பாளர் டினேஷ் சந்திமால் அவரின் பிடியினை நழுவ விட்டார். ஆரம்பத்தில் வழங்கிய அழுத்தத்தை இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்நது வழங்க முடியவில்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய  வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர்.

இந்தியா அணி 20 ஓவர்களில்  5 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் ஷிகார் தவான் 4 ஆறு ஓட்டங்கள், 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 90 (49)ஓட்டங்களையும், மானிஷ் பாண்டி 37(35) ஓட்டங்களையும், ரிஷாப் பான்ட் 23 (23)ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல்  13 (06)ஓட்டங்களையும்   பெற்றனர். ரோஹித் ஷர்மா ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்த அதேவேளை சுரேஷ் ரெய்னா 01 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் டுஸ்மாந்த சமீர முதலிரு ஓவர்களில் 3 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டினை கைப்பற்றினார். அவர் தன்னுடைய நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களை  கைப்பற்றினார். தனுஷ்க குணதிலக 3 ஓவர்களில் 19 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டினை கைப்பற்றினார். நுவான் பிரதீப் 3 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினையும், ஜீவன் மென்டிஸ் 3 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். திசர பெரேரா 3 ஓவர்களில் 25 ஓட்டங்களை வழங்கிய அதேவேளை அகில தனஞ்செய 4 ஓவர்களில் 37 ஓட்டங்களை வழங்கினார்.

இந்த மைதானத்தில் இரண்டாவதாக துடுப்பாடி பெறப்பட்ட வெற்றி இலக்காக 174 ஓட்டங்கள் காணப்படுகிறது. இலங்கை அணிக்கெதிராக இந்தியா அணி இரண்டு தடவைகளும் பாகிஸ்தான் அணி ஒரு தடவையும் இந்த  எண்ணிக்கையினை பெற்றுள்ளார்கள். இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கெதிராக 158 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

 

-விமல்-

ஆர்.பிரேமதாச மைதானத்திலிருந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*