சுதந்திர கிண்ணம் – இந்தியா அணிக்கு 140 வெற்றியிலக்கு

8.53 PM

சுதந்திர கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடுகின்றன. இந்தியா அணியின் சிறப்பான பந்துவீச்சு பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தியுள்ளது. பந்து வீச்சில் உனட்கட் மற்றும் ஷஹால் ஆகியோர் இந்தியா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசினார்கள். இந்தியா அணியின் களத்தடுப்பு இன்று சிறப்பாக அமையவில்லை. சில பிடிகள் நழுவவிடப்பட்டன. களத்தடுப்பு சரியாக அமைந்திருந்தால் ஓட்ட எண்ணிக்கையினை இன்னமும் கட்டுப்படுத்தியிருக்கலாம். விராத் கோலி அணியில் இல்லாமையினால், வழமையாக இந்தியா அணியில் காணப்படும் ஆக்ரோஷமான நிலை இன்று காணப்படவில்லை. பங்களாதேஷ் அணி தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்களை இழந்தாலும் ஒரு புறமாக லிட்டோன் டாஸ் மற்றும் ஷபீர் ரஹ்மான் ஆகியோர் விக்கெட்கள் வீழாமல் பிடித்து வைத்தமையினால் பங்களாதேஷ் அணி ஓரளவு சிறப்பான ஓட்ட எண்ணிக்கையினை பெற முடிந்தது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்று 140 என்ற வெற்றியிலக்கை இந்தியா அணிக்கு நிர்ணயித்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் லிடோன் டாஸ் 34(30) ஓட்டங்களையும், ஷபீர் ரஹ்மான் 30(26) ஓட்டங்களையும், முஸ்பிகியூர் ரஹீம் 18(14) ஓட்டங்களையும், தமீம் இக்பால் 15(16) ஓட்டங்களையும், சௌமிய சர்கார் 14 (12) ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜயதேவ் உனட்கட் 03(4- 38/3 ) விக்கெட்களையும், விஜய் சங்கர் 02 (4 – 32/2) விக்கெட்களையும்  யுஸ்வேந்த்ரா ஷஹால் 01 (4 – 19/1) விக்கெட்டினையும், சர்டூல் தாகூர் 01(4- 25/1) விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள். வோஷிங்டன் சுந்தர் 04 ஓவர்கள் பந்துவீசி 23 ஓட்டங்களை வழங்கினார்.

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி தமது துடுப்பாட்டத்தை நிறைவு செய்த வேளை.

6.35 PM சுதந்திர கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

இந்தப் போட்டியினைப் பார்வையிட மிகக் குறைவான பார்வையாளர்களே வருகை தந்துள்ளனர்.

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன்னர் இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

-விமல்-
ஆர். பிரேமதாசா மைதானத்திலிருந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*