சுதந்திரக் கிண்ணம் – இந்தியாவுக்கு வெற்றி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற சுதந்திர தினக் கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தமையினால் பங்களாதேஷ் அணியினை 139 ஓட்டங்களுக்கு இந்தியா அணியினால் கட்டுப்படுத்த முடிந்தது. பதிலுக்கு துடுப்பாடிய வேளையில் இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாகவே துடுப்பாடினார்கள். இதன் காரணமாக 18.4 ஓவர்களில் வெற்றியினை பெற முடிந்தது. முதலிரு விக்கெட்களையும் இந்தியா அணி வேகமாக இழந்த போதும் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகார் தவான் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டம் (83) இந்தியா அணிக்கு துடுப்பாட்டத்தில் கைகொடுத்தது.
துடுப்பாட்டத்தில் தடுமாறிய பங்களாதேஷ் அணி பந்துவீச்சிலும் இந்தியா அணிக்கு போதியளவு அழுத்தத்தை கொடுக்கவில்லை. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கொட்னி வோல்ஸ் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள போதும் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு பலமாகவில்லை என்பது பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றமே.
140 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இந்தியா அணி 18.4 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் ஷிகர் தவான் 55(43)ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 28(27)ஓட்டங்களையும், மானிஷ் பாண்டி ஆட்டமிழக்காமல் 27(19) ஓட்டங்களையும் , ரோஹித் ஷர்மா 17(13) ஓட்டங்களையும், ரிஷாப் பான்ட் 07(08) ஓட்டங்களையும் பெற்றார்கள். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ரூபல் ஹொசைன் 02 (3.4 – 24/2) விக்கெட்களையும், டஸ்கின் அஹமட்01 (3-28/1) விக்கெட்டினையும், முஸ்டபைஸூர் ரஹ்மான் 01 (4 – 31/1) விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் லிடோன் டாஸ் 34(30) ஓட்டங்களையும், ஷபீர் ரஹ்மான் 30(26) ஓட்டங்களையும், முஸ்பிகியூர் ரஹீம் 18(14) ஓட்டங்களையும், தமீம் இக்பால் 15(16) ஓட்டங்களையும், சௌமிய சர்கார் 14 (12) ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜயதேவ் உனட்கட் 03(4- 38/3 ) விக்கெட்களையும், விஜய் சங்கர் 02 (4 – 32/2) விக்கெட்களையும்  யுஸ்வேந்த்ரா ஷஹால் 01 (4 – 19/1) விக்கெட்டினையும், சர்டூல் தாகூர் 01(4- 25/1) விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள். வோஷிங்டன் சுந்தர் 04 ஓவர்கள் பந்துவீசி 23 ஓட்டங்களை வழங்கினார்.

போட்டியின் நாயகனாக தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவு செய்யப்பட்டார்.

-விமல்-
ஆர்.பிரேமதாச மைதானத்திலிருந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*