சிங்கங்களை சூரையாடிய புலிகள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண 20-20 கிரிக்கெட் போட்டி தொடரின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 05 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 214 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் காணப்பட்ட போதும், முஸ்பிகியூர் ரஹீமின் சிறந்த துடுப்பாட்டம் பங்களாதேஷ் அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தது. போட்டி இறுதி ஓவர் வரை இரு அணிக்கும் வெற்றி வாய்ப்புகளுள்ள போட்டியாக காணப்பட்டது. இறுதி ஓவரில் பங்களாதேஷ் அணி 10 ஓட்டங்களை பெறவேண்டும் என்ற நிலையில் 04 பந்துகளில் அந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டார்கள். பங்களாதேஷ் அணியின் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் வேகமாகவும், சிறப்பாகவும் அமைந்தது. தமீம் இக்பால், லிட்டோன் டாஸ் ஆகியோர் இணைந்து அவர்களுக்கான வெற்றி வாய்ப்பை உருவாக்கினார்கள். முஸ்பிகியூர் ரஹீமின் நேர்த்தியான துடுப்பாட்டம் பங்களாதேஷ் அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பாடிய முஸ்பிகியூர் ரஹீம் பின்னர் வேகமாக அடித்தாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தியதோடு இறுதிவரை போராடி தனது அணிக்கான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். பங்களாதேஷ் அணியினர்  20-20 போட்டிகளில் முதற்தடவையாக 200 ஓட்டங்களை தாண்டினார்கள். போட்டியின் நாயகனாக முஸ்பிகியூர் ரஹீம் தெரிவானார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு இன்று மோசமாக காணப்பட்டது. திசர பெரேரா, நுவான் பிரதீப் ஆகியோர் விக்கெட்களை கைப்பற்றிய போதும் முழுமையாக நல்ல பந்துகளை வீசவில்லை. ஒட்டுமொத்தமாக இலங்கை அணியின் பந்துவீச்சு இந்த தோல்விக்கு காரணமாக  அமைந்துள்ளது. களத்தடுப்பும் கூட இலங்கை அணிக்கு இன்று சிறப்பாக அமையவில்லை.

215 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 19.4 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் முஸ்பிகியூர் ரஹீம் 04 ஆறு ஓட்டங்கள், 05 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 72 (35) ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். லிட்டோன் டாஸ் 05 ஆறு ஓட்டங்கள், 02 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 43 (19) ஓட்டங்களையும், தமீம் இக்பால் 47 (29) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 5.5 ஓவர்களில் 74 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொடுத்தனர். மஹமதுல்லா 20(11) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 02 (04 -37/2 ), விக்கெட்டுகளையும், திசர பெரேரா 02 (3.4 -36/1 ) விக்கெட்களையும், டுஸ்மாந்த சமீர 01 (04 – 44/1) விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள். அகில தனஞ்செய 03 ஓவர்களில் 36 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 02 ஓவர்களில் 22 ஓட்டங்களையும், ஜீவன் மென்டிஸ் 02 ஓவர்களில் 25 ஓட்டங்களையும், தஸூன் சாணக்க 01 ஓவரில் 12 ஓட்டங்களையும் வழங்கினார்கள்.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக துடுப்பாடி சிறப்பான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டது. குசல் பெரேரா, குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக ஆகியோர் நல்ல முறையில் இணைப்பாட்டங்களை வழங்கியது மாத்திரமல்லாமல் வேகமாகவும் துடுப்பாடினார்கள். 13 வது ஓவரில் மஹமதுல்லா இரண்டு விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்டத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. 16 பந்துகளில் 3 விக்கெட்களை இலங்கை அணி இழந்தது. கடந்த காலங்களிலும் இலங்கை அணியில் இந்த பிரச்சினை காணப்பட்டுள்ளது. விக்கெட்கள் வீழ ஆரம்பித்தால் தொடர்ச்சியாக வீழ்த்தப்படும். மீண்டும் இணைப்பாட்டங்களை உருவாக்கி ஓட்டங்களை ஓடி பெற்று மீண்டும் அடித்தாட முயற்சிக்க வேண்டும்.  குசல் பெரேரா, உப்புல் தரங்க ஆகியோர் மீண்டும் இணைப்பாட்டத்தை உருவாக்கியதோடு வேகமாக அடித்தாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.  இறுதி ஓவரில் இலங்கை அணி இரண்டு விக்கெட்களை இழந்தது.

இலங்கை அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து  214 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் பெரேரா 02 ஆறு ஓட்டங்கள், 08 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 74 (49) ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 06 ஆறு ஓட்டங்கள், 02 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 57(30) ஓட்டங்களையும், உப்புல் தரங்க ஆட்டமிழக்காமல் 32 (15) ஓட்டங்களையும் , தனுஷ்க குணதிலக 26(19) ஓட்டங்களையும், பெற்றனர்.  இறுதி ஓவரில் களமிறங்கிய ஜீவன் மென்டிஸ் 06 (02) ஓட்டங்களையும் பெற்றார்.   டினேஷ் சந்திமால் 02(04) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த அதேவேளை தஸூன் சாணக்க ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். திசர பெரேரா இறுதி ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், முஸ்டபைஷூர் ரஹ்மான் 03 (04 – 49/3) விக்கெட்களையும், மஹமதுல்லா 02 (02 – 15/2) விக்கெட்களையும், டஸ்கின் அஹமட் 01 (03 – 40/1) விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

சுதந்திர கிண்ண தொடரின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் மூன்று அணிகளும் தலா இரண்டு புள்ளிகளை பெற்று சமநிலையான கட்டத்தில் காணபப்டுகின்றன. இந்த நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக அமையவுள்ளன. நாளை மறுதினம் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கான போட்டி நடைபெறவுள்ளது.

-விமல்-
ஆர்.பிரேமதாச மைதானத்திலிருந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*